போபால்: சட்டம், ஒழுங்கைக் காப்பதுதான் காவலர் பணி. ஆனால், காவலர் பணியில் சேர்வதற்கே சட்டவிரோத வழிமுறையைக் கையாண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் வந்ததுபோல, உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக வேறு சிலர் தேர்வெழுதி, எல்லா நிலைகளிலும் தேறி, பணியில் சேரவிருந்த நிலையில் மோசடி அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய அந்தத் தேர்வில் மாநிலம் முழுதும் பல்வேறு மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்பில் மூன்று மாவட்டங்களில் குறைந்தது 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் உண்மையான தேர்வர்களும் அவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்தவர்களும் அடங்குவர்.
கடந்த 2023 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடந்த, 7,090 காலிப் பணியிடங்களுக்கான தேர்வைக் கிட்டத்தட்ட 700,000 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் 2024 மார்ச்சில் வெளியாயின. உடற்தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு 2025 மார்ச்சில் இறுதிக்கட்டத் தேர்வு நடைமுறைகள் இடம்பெற்றன.
அப்போதுதான் அடையாள ஒற்றுமை மூலம் ஆள்மாறாட்ட மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் முரைனா நகரைச் சேர்ந்த ராம் ரூப் குர்ஜார் என்ற ஒருவர், பணியேற்பதற்காக அலிராஜ்பூரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றார். அவரது தேர்வு அனுமதி அட்டையிலும் ஆதார் அட்டையிலும் இருந்த படங்கள், அவரது இப்போதைய தோற்றத்தை ஒத்தில்லாததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, கைரேகைச் சோதனையில் தேர்வெழுதியவர் குர்ஜார் இல்லை என்பது உறுதியானது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை குர்ஜார் ஒப்புக்கொண்டார்.
தம் சார்பில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமரேந்திர சிங் என்பவர் தேர்வெழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். அவ்வாறு, இன்னொருவர்க்குப் பதிலாகத் தேர்வெழுதுவோர் ‘தீர்வர்’ (Solver) என அழைக்கப்படுகின்றனர். அதற்காக, அமரேந்திருக்கு குர்ஜார் 100,000 ரூபாய் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரையும் காவல்துறை கைதுசெய்தது.
இதேபோன்று மோசடியில் ஈடுபட்ட வேறு சில சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. ஒட்டுமொத்தச் செயல்முறையும் நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டதை விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கணினி வழியாக ஆதாரில் இடம்பெற்றுள்ள கைரேகையையும் முக அடையாளத்தையும் அவர்கள் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ரகசிய விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.