தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்

பல மருத்துவர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை

2 mins read
75eccd42-c0d2-4852-8660-448af3fd6c8e
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு அகமதாபாத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கோரி நாட்டின் ஆகப்பெரிய மருத்துவச் சங்கத்தின் 24 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தபோதும், பல இளநிலை மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டனர்.

மேற்கல்வி பயின்றுகொண்டிருந்த அந்த 31 வயது மருத்துவர் ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களில் இறங்கிய மருத்துவர்கள், கடந்த வாரம் அவசர சிகிச்சை தேவையில்லாத நோயாளிகளைப் பார்க்க மறுத்துள்ளனர்.

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிகழ்ந்த அக்கொடூரச் சம்பவம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தியாவில் கடும் சட்டங்கள் இருந்தபோதும் பெண்கள் எவ்வாறு தொடர்ந்து அவதியுறுகின்றனர் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்தியச் சட்டத்தின்கீழ் அடையாளப்படுத்தப்பட முடியாத அப்பெண் மருத்துவரின் தந்தை, “என் மகள் போய்விட்டார், ஆனால் மில்லியன்கணக்கான மகன்களும் மகள்களும் என்னுடன் உள்ளனர். இது எனக்குப் பெருந்தெம்பு தந்துள்ளது. இதன்மூலம் எங்களுக்கு ஏதாவது பலன் கிட்டும் என நம்புகிறேன்,” என்று சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு போராட்டத்தை முடித்துக்கொண்ட இந்திய மருத்துவச் சங்கம், நாட்டில் உள்ள மருத்துவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியது. எனவே, விமான நிலையங்களில் நடப்பில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளைப் போன்று மருத்துவமனைப் பணியாளர்களும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய பிரதமர் தலையிட வேண்டும் எனச் சங்கம் கோரியது.

திரு மோடிக்குச் சொந்தமான குஜராத்தில் அரசாங்க மருத்துவமனைகளில் 6,000க்கும் அதிகமான பயிற்சி மருத்துவர்கள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அவசரத் தேவையில்லாத மருத்துவச் சேவைகளைவிட்டு ஒதுங்கியிருந்தனர். எனினும், தனியார் மருத்துவமனைகள் வழக்கமான செயல்பாடுகளைத் தொடர்ந்தன.

குறிப்புச் சொற்கள்