புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சுற்றுச் சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், தமக்கு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதரவளிக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது உண்ணாவிரதம் திங்கட்கிழமை (ஜூலை 29) அன்று 2வது நாளாக தொடர்கிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜபி) நிறுவனரான அபிஜீத் டிப்கே, அவர் வேண்டுகோள் விடுக்கும் காணொளியைப் பதிவிட்டுள்ளார்.
அதில், பொதுமக்கள் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கலாம் அல்லது தங்களது மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களிலேயே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தலாம் என்று சோனம் வாங்சுக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“அனைவருக்கும் நமஸ்காரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், சிஜபி மற்றும் லடாக் மக்களின் உரிமைக்காகவும், உப்பும் தண்ணீரும் மட்டுமே அருந்தி நான் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் 2வது நாளை எட்டியுள்ளது. இங்கு ஏற்கெனவே ஏராளமான மக்கள் என்னோடு கைகோத்துள்ளனர். நீங்களும் இதில் இணையலாம். டெல்லிக்கு வந்து நீங்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தால் அது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும்,” என்று அவர் பேசியுள்ளார்.
நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் சிஜபி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக் களத்திலேயே சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

