அகமதாபாத்: தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை மில்லியன் கணக்கான இந்துக்கள் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.
உலகிலேயே ஆக மோசமான மாசு அளவைக் கொண்டுள்ளவை எனக் கருதப்படும் புதுடெல்லி உட்பட பல நகர்களில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டும் பட்டாசு சத்தம் அந்நகர்களில் ஒலிக்கவே செய்தன.
“பட்டாசுகள் சுற்றுச்சூழலை சேதப்படுத்தினாலும் எங்களுக்கு அவை செல்வச் செழிப்பைக் குறிப்பவை,” என்று குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த உள்ளூர் வர்த்தகர் யாஷ் கடானி தெரிவித்தார்.
தடைகளை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தபோதும், அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இவ்வாண்டு நெருக்குதலைச் சந்தித்துள்ளன. அதிகரித்த பட்டாசு விலை உட்பட உயரும் வாழ்க்கைச் செலவினத்தால் பட்டாசுகளுக்கான தேவையும் விற்பனையும் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
அகமதாபாத் அருகே உள்ள வாஞ்ச் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் கைப்பட பட்டாசுகளைத் தயாரித்து வருகின்றனர். பாதுகாப்புத் தரநிலைகள் அதிகம் வலியுறுத்தப்படாத ஒரு தொழில்துறையாக இந்தப் பட்டாசுத் தயாரித்தல் விளங்குகிறது.
வாஞ்ச் கிராமத்தில் உள்ள சுமார் 10,000 பேர் பட்டாசுத் தயாரித்தலில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் வேலை செய்யும் இவர்களுக்கு, ஒருநாள் சம்பளம் 500 ரூபாய் (S$5.95).
சிறைத் தண்டனை, அபராதம் என மிரட்டல்கள் விடுக்கப்பட்டும் குறிப்பாக தீபாவளி காலத்தில் பட்டாசுகளுக்கான தடைகளை நடப்புக்குக் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏறத்தாழ 20 மில்லியன் பேர் வசிக்கும் புதுடெல்லி, உலகிலேயே ஆக மோசமான மாசு அளவு உள்ள தலைநகரம். ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து காற்றுத் தரம் மோசமடைந்து வருகிறது. அறுவடைக்குப் பின் பண்ணையில் எஞ்சியவற்றுக்கு எரியூட்டுதல், வாகனப் புகை, பட்டாசுப் புகை எனப் பல காரணிகள் காற்றுத் தரத்தை மோசமாக்கிவருகின்றன.

