புதுடெல்லி: அவசரகாலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60,000 குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு இந்திய ராணுவத்தின் உதவியுடன் சிறப்புத் தற்காப்புப் பயிற்சி அளிக்க இந்திய உள்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் நவீன பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்கும் பொருட்டு, புதிய தொழில்நுட்பங்கள், தற்காலத் திறன்களுடன் கூடிய வலிமையான குடிமைப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் சுட்டிக்காட்டி இருந்தார். அந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த, இந்திய உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் தீயணைப்பு சேவைகள், குடிமைப் பாதுகாப்பு, ஊர்க்காவல் படை இயக்ககம் ஆகியவை இந்திய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன.
தலைமைப் பயிற்சியாளர்கள் தேர்வு
முதற்கட்டமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, மேகாலயம், சிக்கிம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 12 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வோர் மாநிலங்களில் இருந்து 50 தலைமைப் பயிற்சியாளர்கள் வீதம் மொத்தம் 600 பேருக்கு ராணுவத்தின் சிறப்புப் பயிற்சி மையங்களில் மூன்று நாள்கள் தீவிரப் பயிற்சி வழங்கப்படும்.
அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வு, தற்காப்பு நடவடிக்கைகள், அவசரகாலத்தைச் சமாளிக்கும் திறன்கள், தகவல் தொடர்பு மேலாண்மை, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இதில் கற்பிக்கப்படும்.
நவம்பர் இரண்டாம் வாரத்துக்குள் 600 தலைமைப் பயிற்சியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவுசெய்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், குறுகிய காலத்தில் 60,000 தன்னார்வலர்கள் முழுமையடைந்து, அவசரகாலப் பாதுகாப்புச் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளும் வல்லமையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
