தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கன்னட மொழி குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

2 mins read
183d4dfe-1ef7-4cf2-a38c-31bfb60cd959
கமல்ஹாசன். - படம்: ஊடகம்

பெங்களூரு: நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக சில தரப்பினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கமல்ஹாசனும் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என்றார். இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே... எனது வாழ்க்கையும் குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் நடிகர் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஓர் அங்கம்,” என்றார்.

ஆனால், இதன் மூலம் கன்னட மக்களை கமல் அவமதித்துவிட்டதாக அங்குள்ள அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் கூறியதை ஏற்க இயலாது என அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோபத்துடன் கூறினர்.

கன்னட ரக்‌ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், கமல்ஹாசன் பெங்களூருக்கு வந்தபோது அவர் மீது கருப்பு மை பூச தயாராக இருந்ததாகவும், அதற்குள் அவர் ஓடிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது தாய்மொழியைப் புகழ்ந்து பேசும் முயற்சியில், கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படத்தின் பதாகைகள், சுவரொட்டிகளை கர்நாடகா முழுவதும் கன்னட அமைப்பினர் கிழித்து எறிகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்