ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கண்ணில்படுபவர்களை எல்லாம் தாக்கும் அணில்

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கண்ணில்படுபவர்களை எல்லாம் தாக்கும் அணில்

பேராசிரியர்கள் உட்பட 20 பேரைக் கடித்துத் தாக்கியதால் பரபரப்பு
கோப்புப் படம்

03 May 2026 - 3:24 pm

1 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில், ஆக்ரோஷமான அணில் ஒன்று பேராசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில்படுபவர்களை எல்லாம் கடித்துக் குதறி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு வாரங்களில் மட்டும் அந்த அணில் ஏறத்தாழ 20 பேரைத் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணிலின் திடீர் தாக்குதலால் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவுகிறது. அந்த அணிலைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அணிலின் நடமாட்டத்தைக் கணிப்பது கடினமாக இருப்பதால் அதனைப் பிடிப்பது பெரும் சவாலாக உள்ளதாகவும் அணிலைக் கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் துணைவேந்தர் நவீன் நவனா அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெட்டனஸ் ஊசிகள் போடப்பட்டுள்ளன.

அணிலின் இந்த விசித்திரமான ஆக்ரோஷத்திற்கு அதிகப்படியான கோடை வெப்பமும் நீண்ட நேரப் பசியும் காரணமாக இருக்கலாம் என விலங்கியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதிக வெப்பம் சிறிய வகை விலங்குகளுக்கு மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி அவற்றின் தன்மையை மாற்றக்கூடும் என அவர்கள் விளக்கியுள்ளனர். விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்கள்துணைவேந்தர்மாணவர்கள்பதற்றம்அணில்