கொழும்பு: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (நவம்பர் 10) இரவு நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் மாண்டனர்; பலர் காயம் அடைந்தனர்.
இந்த உயிரிழப்பு தங்களுக்குக் கடுந்துயரை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கை, மாலத்தீவு, நேப்பாளம் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
“டெல்லியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தால் இலங்கை துயரில் ஆழ்ந்துள்ளது. இந்திய மக்களுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இலங்கை இருக்கிறது. பாதிப்படைந்தோரை நினைத்து வருந்துகிறோம்,” என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
பலர் உயிரைப் பறித்த வெடிப்புச் சம்பவத்தால் கடுந்துயரில் ஆழ்ந்திருப்பதாக மாலத்தீவு அதிபர் முகம்மது முயிசு கூறியுள்ளார்.
“மாண்டோரின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். இந்தச் சவால்மிக்க காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய மக்களுக்கும் பக்கபலமாக மாலத்தீவு இருக்கிறது,” என்று அதிபர் முயிசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதே கருத்தை நேப்பாளத்தில் இடைக்காலப் பிரதமர் சுசிலா கார்கியும் பதிவிட்டார்.
வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிர்ச்சி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

