இலங்கைக்குப் பயணிகள் படகுச் சேவை; நிதியாதரவை நீட்டிக்கும் இந்தியா

1 mins read
c0d6ecb4-ed89-43c8-aa74-09eeff94c584
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகு, இதுவரை 15,000 பேருக்குச் சேவை வழங்கியுள்ளது. - படம்: இந்திய அரசு

புதுடெல்லி: இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவைக்கு வழங்கப்படும் நிதி ஆதரவை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அதன்படி, இலங்கை ரூபாய் 30 கோடி (ரூ.8.61 கோடி, S$1.28 மில்லியன்) நிதியுதவி வழங்கப்படும்.

“இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்பையும் மக்களுக்கு இடையிலான தொடர்பையும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான கடப்பாட்டிற்கேற்ப இந்த நிதியாதரவு நீட்டிப்பு அமைகிறது,” என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

முக்கியத் தளவாட, செயல்பாட்டுச் செலவினங்களை ஈடுகட்டுவதன்மூலம் கட்டுப்படியாகும் தன்மையையும் நீடித்த செயல்பாட்டையும் உறுதிசெய்யும் நோக்கில் இந்த நிதியாதரவு வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் அந்தப் பயணிகள் படகுச் சேவை தொடங்கியது. அதுமுதல் இதுவரை 15,000 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான பண்பாட்டு, பொருள், சமூக உறவுகள் மறுவுறுதிபடுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழி இணைப்பிற்குப் புத்துயிரூட்டியது முக்கியமான மைல்கல் என்றும் தூதரகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்