கொழும்பு: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே ராமர் பாலம் இருக்கும் பகுதியில் சுற்றுலாப் படகுச் சேவையை இலங்கை அரசாங்கம் தொடங்க இருக்கிறது.
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்குப் பயணிகள் படகுச் சேவை தொடங்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார்.
30க்கும் மேற்பட்ட மணல் திட்டுகளில் சில பகுதிகளை இலங்கை அரசாங்கம் சுற்றுலாவுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காகச் சில மணல் திட்டுகளைத் தனியார் பயன்படுத்திக் கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்தப் படகுச் சுற்றுலா சேவைக்குச் சுற்றுப்பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் இந்த ராமர் பாலத்தைச் செயற்கைக்கோளில் பதிவான காட்சிகள் மூலம் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.