பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும் இலங்கை கடற்படை

பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும் இலங்கை கடற்படை

படம்: தினத்தந்தி இணையத்தளம்

21 Sep 2026 - 4:19 pm

2 mins read

ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன.

இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை மயிலட்டி துறைமுகம், மன்னார், வவுனியா, காங்கேசன்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பல படகுகள் இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் பல படகுகள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் மட்டும் தமிழக மீனவர்களின் 200க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இலங்கை மயிலட்டி துறைமுகத்தில் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பல்வேறு படகுகள் ‘பொக்லைன்’ இயந்திரத்தைப் பயன்படுத்தி உடைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், “மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் படகுகளைத் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்காமல் இலங்கை அரசு அவற்றை அரசுடைமையாக்கி, உடைக்கும் செயல் கண்டனத்திற்குரியது,” என்றார்.

மேலும், “இது தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இலங்கைப் பிரதமரை நேரில் சந்தித்து அரசுடைமையாக்கப்பட்ட அனைத்துப் படகுகளையும் மீட்டு தமிழகத்திற்குக் கொண்டுவந்து மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்