மாஸ்கோ: ரஷ்யாவின் உஃபா நகரில் நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் இந்திய மாணவர்கள் நால்வர் உட்பட பலர் காயமுற்றனர்.
தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் ஊடகம் வழியாக இதனைத் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிற்குக் கிழக்கே ஏறக்குறைய 1,200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது உஃபா. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் வெளிநாட்டு மாணவர் விடுதியின் விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமுற்றதாகவும் உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
“உஃபாவில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்திய மாணவர் நால்வர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் இருக்கிறது. காயமுற்ற மாணவர்களுக்கு உதவுவதற்காக கஸனில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் உபாவிற்கு விரைந்துள்ளனர்,” என்று ரஷ்யாவிற்கான இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டத் தகவல்களின்படி, 15 வயது இளையர் ஒருவர் உஃபாவிலுள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, மாணவர்கள் பலரைக் கத்தியால் குத்தினார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
“தாக்குதல்காரரைக் கைதுசெய்ய முயன்றபோது அவர் கடுமையாகப் போராடினார். அப்போது, காவல்துறை அதிகாரிகள் இருவரையும் அவர் கத்தியால் குத்தினார். பின்னர் அவர் தன்னைத்தானே தாக்கி காயம் விளைவித்துக்கொண்டார்,” என்று ரஷ்ய உள்துறை அமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஐரினா வோல்க் ‘ஆர்டிவிஐ’ ஊடகத்திடம் கூறினார்.
காயமடைந்தோரில் நால்வர்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, தாக்குதல் நடத்திய 15 வயது இளையர் அங்குள்ள குழந்தைநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அவர் தடைசெய்யப்பட்ட நாஸி ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

