சென்னை: தமிழகத்தின் நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களுக்கு பத்தாயிரம் புத்தகங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.
“அதன்படி, இன்று (நவம்பர் 5) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களை மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.
“அதேபோல, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்கள் என மொத்தம் 10,000 புத்தகங்களை ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
“இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் புத்தகங்களை வழங்கினார்.
“மு.க.ஸ்டாலின் தம்மிடம் அளிக்கப்பட்ட புத்தகங்களில் இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளார்,” என்று திமுகவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
