ராகுல் நடைப்பயணத்தில் இணையும் ஸ்டாலின்; மற்ற தலைவர்கள் அடுத்தடுத்து பங்கேற்பு

2 mins read
15df7c47-9336-417e-80ab-f5aaf6f4d04c
கடந்த ஏப்ரல் மாதம் பீகாரில் நடைப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து, காங்கிரஸ், பீகார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பீகாரில் நடைப்பயணம் தொடங்கியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் தேதி, இந்த நடைப்பயணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் நாள்களில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா (ஆகஸ்ட் 29), உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் (ஆகஸ்ட் 30) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியுடன் நடைப் பயணத்தில் கைகோக்க உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில், ராகுல் காந்தியின் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே, இந்திய துணை அதிபர் தேர்தலில் பொதுவான வேட்பாளரை அறிவித்ததன் மூலம், எதிர்க்கட்சிக் கூட்டணி தனது ஒற்றுமையை பறைசாற்றியுள்ளது.

தற்போது பீகார் போராட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பது இண்டியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்