தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுத் திட்டத்தில் ஸ்டாலின் பெயர்: உச்ச நீதிமன்றம் அனுமதி

2 mins read
90dd1d18-024f-4d9e-b59e-1c3c72038ca0
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கு தொடுத்த சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: தமிழக அரசுத் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக எம்பி சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படம் மட்டுமே இடம்பெறலாம் என்றும் குறிப்பிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

முன்னாள் முதல்வரின் படம், ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தவும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதையடுத்து, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை புதன்கிழமை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) தொடங்கியுள்ளது.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு வழக்கை விசாரித்தபோது, அரசியல் தலைவர்களின் பெயரில் நாடு முழுவதும் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக திமுக சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மேலும், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், முதல்வர் ஸ்டாலின் பெயரிலான திட்டத்தை மட்டும் சிவி சண்முகம் எதிர்ப்பதை ஏற்க முடியாது என்றும் ஒருவரது பெயருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சண்முகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கு தொடுத்த சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்