அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் ஆர்வமாக உள்ளோம்: இந்தியா

2 mins read
06245764-7785-4d2a-83ea-24642d62af65
ரந்திர் ஜெய்ஸ்வால். - படம்: தி எக்கனாமிக் டைம்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்திய-அமெரிக்க வர்த்தக ப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் அளித்துள்ள விளக்கம் துல்லியமானது அல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை 500%ஆக உயர்த்தும் அமெரிக்காவின் சட்ட மசோதா குறித்து இந்தியா அறிந்து இருப்பதாகவும் இது தொடர்பான நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் நிறைவேறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லூட்னிக், அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச முடியவில்லை என்றும் அதனால்தான் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இதை இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் எட்டு முறை தொலைபேசியில் பேசி உள்ளதாகக் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் திரு ஜெய்ஸ்வால், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார்.

எனவே அமைச்சர் லூட்னிக் கூறியிருப்பது தவறான தகவல் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே அமெரிக்காவைப் போல் இந்தியாவும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் உறுதியாகவும் முனைப்பாகவும் இருந்ததாக திரு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்பினரும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தக ஒப்பந்தத்தில் பல தருணங்களில் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தை கிட்டத்தட்ட எட்டிப் பிடித்ததாகவும் கூறினார்.

உலகில் இரண்டு பெரிய பொருளியல் சக்திகளுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் அமைய வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்து ஆர்வமாக உள்ளது,” என்றார் ரந்திர் ஜெய்ஸ்வால்.

ஐநா மன்றத்தின் அனைத்துலக அமைப்புகளில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்து இருந்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த திரு ஜெய்ஸ்வால் , உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அனைத்து நாடுகளின் ஆலோசனை, கூட்டு நடவடிக்கை தேவை என இந்தியா விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா பன்முகத்தன்மையை ஆதரிக்கும் நாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி தொடர்பான ஆதாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்ட அவர், 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்திசெய்ய பல்வேறு மூலங்களில் இருந்து மலிவு விலையில் எரிசக்தி பெற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்