தஞ்சாவூர் மாநகராட்சியில் தரமற்ற காலை உணவைத் தூய்மைப் பணியாளர்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

தஞ்சாவூர் மாநகராட்சியில் தரமற்ற காலை உணவைத் தூய்மைப் பணியாளர்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

2 mins read
4a6798eb-a0ec-403a-a1e9-a4f2f6f3c674
காலை உணவு தரமாக இல்லை என்று உணவைத் திருப்பிக் கொடுத்த தஞ்சாவூர் தூய்மைப் பணியாளர்கள். - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, அதனை ஒப்பந்ததாரரிடமே திருப்பி வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இம்மாதம் 9ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என மொத்தம் 757 பேருக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திட்டத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) 14ஆவது வார்டில் பணியாற்றும் 16 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு ரவா கிச்சடி வழங்கப்பட்டது.

அந்த உணவு மிகவும் தரம் குறைந்த நிலையில் இருந்ததாலும் அதனை உண்பதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகக் கருதியதாலும் பணியாளர்கள் உணவை உண்ண மறுத்தனர்.

மேலும், அந்த உணவை வழங்கிய ஒப்பந்ததாரரிடமே அதனைத் திருப்பி ஒப்படைத்த பணியாளர்கள், அதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கடிதம் ஒன்றையும் வழங்கினர்.

இதுகுறித்துப் பேசிய பணியாளர் சங்கப் பிரதிநிதிகள், சோதனை முறையில் உணவு வழங்கப்பட்டபோதே அதன் தரம் குறித்துப் புகாரளிக்கப்பட்டது என்றும் திட்டம் முறைப்படி தொடங்கப்பட்ட பின்பும் தரம் மேம்படுத்தப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

தரமான உணவு வழங்கப்படாவிட்டால் தங்களுக்கு உணவே வேண்டாம் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகர நகர் நல அலுவலர் தெரிவிக்கையில், உணவு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, தரம் குறைந்த உணவு வழங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்