ப.சிதம்பரம்: கச்சா எண்ணெய் விலை சரிவால் பெற்ற ரூ.1.40லட்சம் கோடி எங்கே?

ப.சிதம்பரம்: கச்சா எண்ணெய் விலை சரிவால் பெற்ற ரூ.1.40லட்சம் கோடி எங்கே?

fallback

12 Mar 2016 - 9:13 am

1 mins read

சென்னை: அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் அடைந்துள்ள வீழ்ச்சியால் நரேந்திர மோடி அரசு சேமித்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி எங்கே போனது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் வணிக நிர்வாகவியல் பயிலகத்தில் மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து நேற்று முன்தினம் ஆய்வுரையாற்றிப் பேசிய ப.சிதம்பரம், "மோடி அரசு பதவியேற்றபோது அனைத்துலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 109 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது 30 டாலராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததுள்ளது.

இதனால் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலரை மத்திய அரசு சேமிக்கிறது. வரி விழுக்காடு, தனியாருக்கான பங்குகளைக் கழித்துப் பார்த்தால்கூட, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை அரசு சேமித்துள்ளது. விவசாயம், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளுக்கு அதனைச் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். நல்ல ஆக்கபூர்வமான முதலீடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், செய்யத் தவறிவிட்டனர்," என்றார்.