பிரசவ அறைக்குள் குழந்தையைக் கடித்துக் கொன்ற நாய்

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த நாய் ஒன்று பச்சிளம் குழந்தையைக் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பருக்காபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை காலை கர்ப்பிணி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

சற்று நேரத்துக்குப் பிறகு குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிரசவம் நிகழ்ந்த அறுவை சிகிச்சை அறையிலிருந்து மருத்துவமனை ஊழியர்கள் சிலர் நாயை விரட்டியதை அந்தக் குழந்தையின் உறவினர்கள் பார்த்தனர்.

மேலும், குழந்தை தரையில் கிடத்தப்பட்டிருந்ததையும், அப்போது குழந்தையின் உடலில் காயம் இருப்பதையும் உறவினர்கள் பார்த்ததாக, குழந்தையின் தந்தை ரவி குமார் தெரிவித்துள்ளார். 

ஆனால், மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

 குழப்பமடைந்த பெற்றோர் போலிசில் புகார் செய்தனர். அதில், தங்களுடைய குழந்தையை அறுவை சிகிச்சை அறையில் நாய் கடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மன்வேந்திர சிங், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

இதனையடுத்து மாநிலத்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜய் படேல், “குழந்தை இறந்த பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்றார்.

#தமிழ்முரசு