வூஹானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் 25 இந்திய மாணவர்கள்

புதிய ‘கொரோனா வைரஸ்’ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் நகரம் முடக்கப்பட்டுள்ளதால் அங்கு பயின்றுவரும் இந்திய மாணவர்களில் 25 பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களில் 20 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

வூஹானில் இருந்து 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள யிச்சாங்கில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் மேலும் 14 இந்திய மாணவர்கள் உள்ளகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவர்கள் நேற்று (ஜனவரி 23) இரவு அல்லது இன்று காலை குன்மிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோல்கத்தாவைச் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம், நாளை மறுநாள் நடக்கவிருந்த குடியரசு தின கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்றாலும் பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி சீன அதிகாரிகள் அறுவுறுத்தியிருப்பதாலும் 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது,” என்று டுவிட்டர் வழியாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் நோக்கில் இரு நேரடித் தொலைபேசி எண்களையும் அது அறிவித்துள்ளது.

#தமிழ்முரசு #சீனாவில்இந்தியமாணவர்கள் #வூஹான்