தென்கிழக்காசிய நாடுகளில் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மலேசியாவில் நடப்பில் இருப்பவை நான்காவது கண்டிப்பான நடவடிக்கைகள் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் பிளாவாட்னிக் அரசாங்கப் பள்ளி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆக்ஸ்ஃபர்ட் கொவிட்-19 அரசாங்க நடவடிக்கை கண்காணிப்புச் செயலி, மலேசியா எடுத்த நடவடிக்கைகள் நான்காவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்தது. லாவோஸ் (100 புள்ளிகள்), வியட்நாம் (100 புள்ளிகள்), பிலிப்பீன்ஸ் (90.48 புள்ளிகள்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மலேசியா உள்ளது.
சிங்கப்பூர் எட்டாவது இடத்தில் உள்ளது. கம்போடியா குறித்த தகவல்களை அறிக்கை உள்ளடக்கவில்லை.
பொதுச் சுகாதார நிபுணர்கள், நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பவர்கள் போன்றோருக்கு இந்தத் தகவல் உதவலாம் என்று அந்த திட்டப்பணியின் தலைவர் தாமஸ் ஹேல் கூறினார்.
அந்தச் செயலி வெளியிட்ட அனைத்துலக அளவிலான கண்டிப்பான நடவடிக்கைக் குறியீட்டில் மலேசியா 85.71 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தாய்லாந்தும் அதே அளவிலான புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக அளவில் ஒப்பிடுகையில் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் 51வது கண்டிப்பான நடைமுறைகளாகக் கருதப்படுகின்றன.
122 நாடுகளின் தரவுகள் இந்தத் திட்டப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
அமெரிக்கா (103வது இடம்), பிரிட்டன் (69வது இடம்), ஆஸ்திரேலியா (90வது இடம்) போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைவிட மலேசியா கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வரிசையில் இந்தியா (6வது இடம்), பாகிஸ்தான் (11வது இடம்), இலங்கை (17வது இடம்), வியட்நாம் (21வது இடம்) ஆகிய நாடுகள் 100க்கு 100 புள்ளிகளைப் பெற்றுள்ள 21 நாடுகளில் சில.
சிங்கப்பூர் 61.9 புள்ளிகளுடன் 108வது இடத்தில் உளத்து.
இந்தியா, நியூஸிலாந்து, கத்தார் போன்ற நாடுகள் ஆக அதிக கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ள வேளையில் நிகரகுவா இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வில் பள்ளிகளை மூடுதல், வேலையிடங்களை மூடுதல், பொது நிகழ்வுகளை ரத்து செய்தல், பொதுப் போக்குவரத்தை மூடுதல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல்கள், உள்ளூரில் நடமாட்டம், வெளிநாட்டுப் பயணங்கள், பரிசோதனை நடைமுறைகள், தொடபில் இருந்தவர்களை அடையாளம் காணுதல் போன்ற நடைமுறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


