திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு; பிறந்தநாளில் உயிர்பிரிந்தது

1 mins read
687b8ccc-6b72-46b2-8298-b6d1222efee8
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் காலமானார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) ஜெ.அன்பழகன் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் காலமானார். அவருக்கு வயது 62.

உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இம்மாதம் 2ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

சிறுநீரகப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குரோம்பேட்டையில் உள்ள ரேலா எனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று முன்தினம் அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 10) காலை சுமார் 8 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டது.

1958ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001ல் முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2011, 2016 ஆண்டுகளில் முறையே திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆதி பகவான், யாருடா மகேஷ் போன்ற படங்களை தயாரித்தார்.

தம்முடைய பிறந்தநாளிலேயே உயிர் நீத்த திரு அன்பழகனின் உடல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கொரோனாதிமுகஉயிரிழப்பு