ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்; புலம்பெயர் தொழிலாளிக்கு மரண தண்டனை

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்; புலம்பெயர் தொழிலாளிக்கு மரண தண்டனை

2 mins read
a1ee0f07-43bb-4a11-bcc7-37fe2ad72ca9
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் என்பவர் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார்.

மசூத்தின் உறவினரான ரபிகா எனும் பெண்ணுக்கும், சஞ்சய்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரபிகாவுக்கு திருமணமாகி, ஒரு மகள் உள்ளார். ரபிகாவின் மகளையும் அடைய நினைத்த சஞ்சய்குமார், ரபிகாவை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

ரயில் பயணத்தின்போது குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்துகொடுத்து மயங்கியதும் ஓடும் ரெயிலில் இருந்து ரபிகாவை கீழேதள்ளி சஞ்சய்குமார் கொலை செய்துவிட்டார்.

பின்னர் வாரங்கலுக்குத் திரும்பிய சஞ்சய்குமாரிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், ரபிகாவின் தொடர்பில் போலிசில் புகார் அளிக்க இருப்பதாக நிஷா குடும்பத்தினர் கூறினர்.

இதனால் நிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய சஞ்சய்குமார் திட்டமிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 20ஆம் தேதி மசூத், நிஷா மற்றும் அவர்களது குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார் சஞ்சய்குமார்.

அதனை சாப்பிட்ட அனைவரும் மயங்கிய பிறகு அந்த 9 பேரையும் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தார் சஞ்சய்குமார்.

இந்த வழக்கில் சஞ்சய்குமார் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். கொலை நடந்த 5 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்