38 வயது மென்பொருள் பொறியாளர் நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொலை; மனைவியின் குடும்பத்தாரிடம் விசாரணை

38 வயது மென்பொருள் பொறியாளர் நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொலை; மனைவியின் குடும்பத்தாரிடம் விசாரணை

2 mins read
36f998c8-3555-4f1c-a8d5-e7671e427069
பகில்லா பவன் குமார் எனும் அந்த 38 வயது ஆடவர், அவரது மைத்துனரின் விதவை மனைவியைப் பார்க்க கடந்த திங்கட்கிழமை அந்த கிராமத்துக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படம்: இந்திய ஊடகம் -

மென்பொருள் பொறியாளர் ஒருவர் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, மனைவியின் குடும்பத்தாரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தெலுங்கானாவின் பல்வந்த்பூர் கிராமத்தில் நிகழ்ந்தது.

அந்த ஆடவர் ஹைதராபாத்தில் மந்திர, தந்திரங்களில் ஈடுபடுவதாக, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியின் குடும்பத்தார் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

பகில்லா பவன் குமார் எனும் அந்த 38 வயது ஆடவர், அவரது மைத்துனரின் விதவை மனைவியைப் பார்க்க கடந்த திங்கட்கிழமை அந்த கிராமத்துக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பவனின் மனைவி கிருஷ்ணவேணியின் சகோதரரான ஜெகன் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஜெகனைக் கொன்று விடப்போவதாக பவன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மந்திர, தந்திரங்களின் மூலம் பவன் தங்களது குடும்பத்துக்கு ஊறு விளைவிப்பதாக ஜெகனும் அவரது மனைவி சுமலதாவும் சந்தேகம் தெரிவித்து வந்தனர்.

துக்கம் விசாரிக்க ஜெகனின் வீட்டுக்கு பவன் தம்பதியினர் சென்ற போது, பவனின் மனைவி கிருஷ்ணவேணியை தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் அனுப்பிவிட்டு, வீட்டை உட்புறமாகத் தாளிட்ட சுமலதா, மற்றொரு பெண்ணின் உதவியுடன் பவனை நாற்காலியுடன் சேர்த்துக் கட்டினார். பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார்.

வீட்டுக்குத் திரும்பி வந்த கிருஷ்ணவேணி, தீ மற்றும் புகையைக் கண்டதாகவும் தம் கணவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டார். கதவைத் திறந்து உள்ளே செல்ல முடியாத அளவுக்கு புகை வந்ததாகக் கூறப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலிசார் வருவதற்குள், கரிக்கட்டையாகிப்போனார் பவன்.

பவன் மற்றும் ஜெகனின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட போலிசார், இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்றனர்.

குறிப்புச் சொற்கள்