கடல்துறை பாதுகாப்பு: இந்தியா, இலங்கை, மாலத்தீவு இணக்கம்

2 mins read
ec771610-9aea-407b-90f5-59faca00acb0
படம்: ஊடகம் -

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளைச் சேர்ந்த உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கடல்துறை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இணங்கி இருக்கிறார்கள்.

அனைவரும் பலன் அடையும் வகையில் வட்டாரத்தில் அமைதியைக் கட்டிக்காக்கவும் அவர்கள் உறுதி தெரிவித்தனர்.

இந்த மூன்று நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான சந்திப்பை சனிக்கிழமை கொழும்பு நடத்தியது. அதில் இந்த இணக்கம் காணப்பட்டது.

அந்தச் சந்திப்பில் மூன்று தரப்புகளும் பொது பாதுகாப்புக்கான மிரட்டல்கள் குறித்து விவாதித்தன.

வேவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்த அணுக்கமாக ஒத்துழைக்கப்போவதாகவும் அவை இணங்கியதாக மூன்று நாடுகளும் விடுத்த கூட்டறிக்கை கூறியது.

கடல்துறை பாதுகாப்பு, எல்லைகள் குறித்த தெளிவு, மாசு கட்டுப்பாடு தகவல்கள் பரிமாற்றம், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுப்பது, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் போன்றவற்றில் கூட்டு முயற்சியாக ஈடுபடுவது முதலான பலவும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடல்துறை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை கடைசியாக புதுடெல்லியில் கடந்த 2014ல் நடந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை இலங்கையில் இப்பேச்சுவார்த்தை நடந்தது.

பங்ளாதேஷ், மொரிஷியஸ் மற்றும் சீசல்ஸ் நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக அதில் கலந்து கொண்டன.

பசிபிக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அளவிலும் வட்டார அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்