இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு

புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் பல நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தனியார் நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்நிறுவனம் மனுவில் கோரியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

எதிர்வரும் குடியரசுத் தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தவும் விவசாய குழுக்கள் முடிவு செய்துள்ளன.

மத்திய அரசுக்கும் விவசாய குழுக்களுக்கும் இடையே இன்று பதினோறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இத்தகைய சூழலில், உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

அந்நிறுவனம் மிகப் பெரிய அரவை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறது. வேளாண் சட்டங்களை அமல்படுத்தாவிட்டால் தங்களைப் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் தங்களையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியி்ல் டிராக்டர் பேரணியை நடத்த அம்மாநில காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

டெல்லிக்குள் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றும் டெல்லிக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் பேரணி நடத்த முன்வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon