இந்தியாவின் குருகிராமைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருவழி பேருந்துச் சேவையை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து மியன்மார், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூருக்கு வந்து சேர 20 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மியன்மாரின் கேல், யங்கூன் ஆகிய நகரங்கள் வழியாகவும், தாய்லாந்தின் பேங்காக், கிராபி ஆகிய நகரங்கள் வழியாகவும் மலேசியாவின் கோலாலம்பூர் வழியாகவும் பேருந்து பயணிக்கும் என்று கூறப்படுகிறாது.
'அட்வென்சர்ஸ் ஓவர்லேண்ட்' எனும் அந்த நிறுவனம் இந்தப் பேருந்துச் சேவையை மணிப்பூரில் உள்ள இம்பால் நகரிலிருந்து இவ்வாண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பயணத்தைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யவும் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்த நிறுவனம்.
பேருந்தில் 20 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். வீடு போன்ற அனைத்து வசதிகளும் பேருந்துக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையே பேருந்துச் சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக 'அட்வென்சர்ஸ் ஓவர்லேண்ட்' நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. அந்த பேருந்துச் சேவைதான் உலகின் ஆக நீளமான பேருந்துச் சேவையாக இருக்கும்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அதிகபட்சம் 4 மணி நேர விமானப் பயணம்தான் என்றாலும், இடையில் 3 நாடுகளைக் கடந்து சாலைவழிப் பயணம் மேற்கொள்வது பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது நிறுவனம்.

