உரிமையாளரின் மரணத்துக்குக் காரணமான சேவலைப் பெரும்பாடுபட்டு பாதுகாக்கும் போலிசார்

உரிமையாளரின் மரணத்துக்குக் காரணமான சேவலைப் பெரும்பாடுபட்டு பாதுகாக்கும் போலிசார்

2 mins read
f4679186-ce5a-471c-9f37-fd2f79082a87
படம்: இந்திய ஊடகம் -

உரிமையாளரின் மரணத்துக்குக் காரணமான சேவல் ஒன்றைப் பிடித்து, பத்திரமாகப் பாதுகாக்கும் பணி தெலுங்கானாவின் ஜகிடியல் மாவட்ட போலிசாருக்குப் பெரும்பிரச்சினையாகி உள்ளது.

சதிஷ் கௌட், 45, என்பவர் தாம் வளர்த்த சண்டைச் சேவலுடன் கோலப்பள்ளி மண்டலத்தில் இருக்கும் லொத்துனூர் எனும் ஊரில் இருக்கும் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

அங்கு நடக்கும் சேவல் சண்டையில் தன்னுடைய சேவலையும் களமிறக்குவது அவரது எண்ணம். அதனால் சேவலின் காலில் கூரான கத்தி ஒன்றை அவர் கட்டிவிட்டிருந்தார்.

சேவலை சண்டைக்கு இறக்க இருந்த சமயத்தில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த அந்தக் கத்தி, சதிஷின் அந்தரங்க உறுப்பில் ஆழமாக வெட்டியது.

ரத்தம் வெகுவாக வடிந்த நிலையில், அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பெருமளவு ரத்தம் வெளியேறிய நிலையில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அதனையடுத்து, 'நோக்கமில்லா மரணம் விளைவித்ததாக' சேவலின் மீது வழக்குப் பதிவு செய்து சேவலையும் அதன் காலில் கட்டப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் போலிசாருக்கு.

பாதுகாப்பதற்காக சேவலை கோழிப்பண்ணைக்கு போலிசார் அனுப்பியதும், 'கொலைக் குற்றத்துக்காக சேவல் கைது செய்யப்பட்டுள்ளதாக' மின்னிலக்க ஊடகங்களில் செய்தி பரவியது.

இவ்வாறு தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட போலிசார், சேவலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைத் தெளிவாக்கினர்.

விசாரணையின் அங்கமாக அந்தச் சேவலைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதனைப் பாதுகாப்பாக கோழிப் பண்ணைக்கு அனுப்பி வைத்ததாக ஜகிடியல் பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜீவன் விளக்கம் அளித்தார்.

சேவல் சண்டையின் போது நிகழ்ந்த விபத்தில் சதீஷ் உயிரிழந்தாலும் அதற்குக் காரணமானவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் பற்றி அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய சேவல் சண்டைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்பதால், அந்த சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்