எதிர்க்கட்சித் தலைவர் வாயில் கிருமியை போடுவேன்: எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றன் மீது ஒன்று குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் துயரமான வேளையில் அரசியல் செய்வதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும் என சஞ்சய் கெய்க்வாட் கூறியுள்ளார். "நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அமைச்சர்களும் கடுமையாக உழைத்து வரும்போது எதிர்க்கட்சியினர் உதவி செய்வதை விட்டுவிட்டு எங்களது முயற்சிகளைக் கெடுத்து வருகின்றனர். "ஒருவேளை கொரோனா கிருமி என் கையில் கிடைத்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன்," என்று சஞ்சய் கெய்க்வாட் கூறியதாக என்டிடிவி செய்தித் தகவல் கூறுகிறது.
லாரி கவிழ்ந்து விபத்து: தொழிலாளர்கள் அறுவர் பலி; 15 பேர் படுகாயம்
ஹைதராபாத்: கூலித்தொழிலாளர்கள் சென்ற லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் 30 தொழிலாளர்களுடன் அந்த லாரி ஹைதராபாத் அருகே ஷம்சாபாத் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னே சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது மோதி பின்னர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் நாயை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றவர் கைது
திருவனந்தபுரம்: புது காலணியைக் கடித்ததால் ஆவேசம் அடைந்த நாய் உரிமையாளர் ஒருவர் அதை தனது இருசக்கர வாகனத்தில் கயிற்றால் கட்டி நான்கு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதான சேவியர் அண்மையில் புது காலணி வாங்கியுள்ளார். அதை அவரது செல்லப்பிராணி கடித்துக் குதறியதாகத் தெரிகிறது. இதனால் நாயை சரமாரியாக அடித்த அவர், அதன் பிறகு கோபம் குறையாமல் அதை தனது இருசக்கர வாகனத்தில் கயிற்றுடன் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அந்தச் செல்லப் பிராணி வேதனையில் அலறியபோதும் சேவியர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பில்லை எனத் தகவல்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு மீண்டும் மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்க வாய்ப்பில்லை என தமிழக ஊடகம் ஆருடம் வெளியிட்டுள்ளது. கட்சித் தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் மேலும் 75 வயது ஆகிவிட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. கடந்த
முறை மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு பெற்றார் சிதம்பரம்.
ஆற்றில் அடித்து வரப்பட்ட இளம் பெண்: திருமணம் செய்துவைக்கும் கிராமம்
புவனேஸ்வர்: சத்தீஸ்கரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சோனி யாதவ் (படத்தில் நடுவில் இருப்பவர்) கடந்த 2016ஆம் ஆண்டு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். பெற்றோர் இல்லாத அவர் ஒடிசா மாநிலத்தின் குஸ்மேல் கிராமத்தில் கரை ஒதுங்கினார். உயிருக்குப் போராடிய அவரை சன்யாசி காலோ என்ற தொழிலாளி மீட்டார். இதையடுத்து சொந்த ஊர் திரும்ப மனம் இல்லை என்று கூறி அவர் வீட்டிலேயே தங்கிவிட்டார் சோனி. தற்போது கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து அவருக்குத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர். போதிய பண வசதி இல்லாததால் சோனியைத் தத்தெடுத்த சன்யாசி காலோவுக்கு கிராமத்தார் பணம் கொடுத்து உதவியுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு கிராமத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே தையல் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளார்.

