செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f4af24f6-be75-4725-80be-99baf8fcd9fe
-

அமெரிக்கா, இந்தியா பேச்சு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமையன்று காணொளி வசதி மூலம் அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் சாய் உள்ளிட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடுப்பூசி கையிருப்பை அதிகப்படுத்துவது குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. மேலும் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை அம்சங்கள் குறித்தும் இருதரப்பும் விவாதித்தன.

காங்கிரஸ் 100 கோடி ரூபாய் நிதி

பெங்களூரு: அனைத்துத் தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் அரசின் முயற்சிக்கு உதவும் விதமாக கர்நாடக காங்கிரஸ் நூறு கோடி ரூபாய் நிதி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகள் மிகவும் மந்த நிலையில் இருப்ப தாக விமர்சித்தார். மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறைந்து விட்டது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், மக்களுக்கு உதவும் வகையில் மாநிலத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

புயல்: ஐந்து கேரள மாவட்டங்கள், ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: டவ்-தே புயலால் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா, தமிழகம், கர்நாடகா, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று காலை நிலவரப்படி, லட்சத் தீவுப் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய அரபிக்கடலில் அப்புயல் நிலைகொண்டிருந்தது.