இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவாணி, 19, என்பவருக்கும் தண்டூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் மே 14ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.
பின்னர் உறவினர் வீடுகளுக்கு விருந்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பியதும் புது மணப்பெண் ஸ்ரீவாணி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார்.
இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அப்பெண் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறினாலும் திருமணத்திற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்குத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதாக உறவினர்கள் கூறினர்.
தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பு மிகுந்து ஸ்ரீவாணி உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
"திருமணத்திற்காகப் போடப்பட்ட பந்தலைப் பிரிப்பதற்குள் அதே பந்தலில் எங்கள் மகளுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிலைக்கு வந்துவிட்டோமே," என அவரது பெற்றோர் கதறித் துடித்தது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

