ஏர் இந்தியா இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக 4.5 மில்லியன் பயணிகளின் தனிநபர் விவரங்கள் கசிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணம் செய்த 4.5 மில்லியன் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, கடன்பற்று அட்டை எண், கடப்பிதழ் எண், தொலைபேசி எண்கள், தொடர்புத் தகவல் போன்றவை உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2011 ஆகஸ்ட் 26 முதல் இவ்வாண்டு பிப்ரவரி 3 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பான முதல் அறிவிப்பு பிப்ரவரி 25ஆம் தேதி பயணிகளின் விவரங்களை சேமிக்கும் தரவு செயல்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் உலக நாடுகளைச் சேர்ந்த 4.5 மில்லியன் ஏர் இந்தியா பயணிகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் கடன்பற்று அட்டையின் ரகசிய சிவிவி எண் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஏர் இந்தியா, பயணிகள் தங்களது தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கெனவே கடன் சுமையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் தரவு கசிவு அந்நிறுவனத்திற்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

