புதுடெல்லி: அனைவரது சுகாதார நலனுக்காகவும் இந்தியா எப்போதும் பாடுபடும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
சொந்தத் தேவைகள் இருந்தபோதிலும் கொவிட்-19 தொற்று நெருக்கடி வேளையில் 123 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா விநியோகித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுள் 51 அணிசேரா நாடுகளும் அடங்கும் என நேற்று முன்தினம் காணொளி வசதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அணிசேரா நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ராஸும் பங்கேற்றார்.
"கொவிட்-19க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது, சிகிச்சை அளிப்பது, தடுப்பூசிகளை மேம்படுத்துவது தொடர்பாக உலகளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.
"ஏனெனில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருடைய பாதுகாப்பையும் உறுதிசெய்ய இயலாது என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது," என்றார் அமைச்சர் ஹர்ஷ்வர்தன். அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரபல 'ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன்ஸ்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது 'பயோலாஜிக்கல் இ' நிறுவனம். எனினும் அந்தத் தடுப்பூசிகளை இந்திய நிறுவனத்தால் நேரடியாக சந்தைப்படுத்த இயலாது. மொத்த உற்பத்தியையும் அமெரிக்க நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே இருதரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் என 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் 'பயோலாஜிக்கல் இ' உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளில் கணிசமான ஒரு பகுதியை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பருக்குள் 300 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆதரவை இந்நிறுவனம் கோரியுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஃபைசர் நிறுவனம் ஏற்கெனவே 50 மில்லியன் தடுப்பூசிகளை தருவதாகவும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளன. இதற்காக உலகளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக உலகச் சந்தையில் போட்டியிடுவதை விட மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என அவை வலியுறுத்தி வருவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்களுக்குத்தான் இருக்கும் என்று மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

