போபால்: இம்மாதம் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை களின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 விழுக்காடு தீக்காயங் களுடன் உயிருடன் மீட்கப்பட்டு அவருக்கு பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் வருண் சிங் புதன் கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து வருண் சிங்கின் உடல் வியாழக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படைத் தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். விமானப்படை சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதையடுத்து அவரது உடல் வியாழன் காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. வருண் சிங்கின் குடும்பத்தினரும் உடன் சென்றனர். அன்று மதியம் மூன்று மணிக்கு அவரது உடல் போபாலைச் சென்று அடைந்தது.
அங்கு வருண் சிங் உடலுக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வருண் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். வருண் சிங்குக்கு சிலை எழுப்பப்படும் என்றும் ஒரு நிறுவனத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வருண் சிங்கின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

