லக்னோ: உத்தரப் பிரதேச தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீடுகளில் இருந்து ரூ.284 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் பியூஷ் ஜெயின், வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களாக தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அவரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.284 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 25 கிலோ தங்க நகைகளும் 250 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் சிக்கின.
அவரிடம் ஐம்பது மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் நீதிமன்றத்தில் அவை முன்னிலைப்படுத்தினர். இதையடுத்து, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தொழிலதிபர் பியூஷ் ஜெயின் தமது பூர்வீக வீட்டுக்கு வரும்போது மிகவும் எளிமையாக காணப்படுவார் என்றும் பழைய இருசக்கர வாகனத்தைத்தான் பயன்படுத்துவார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீட்டின் முன் இரண்டு பழைய கார்களையும் அவர் வைத்துள்ளார்.
அப்படிப்பட்டவரிடம் ரொக்கமாக பல கோடி ரூபாய் இருந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

