அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளியின் சிறுநீரகம் மாயம்

அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளியின் சிறுநீரகம் மாயம்

2 mins read
70f87af1-9514-412a-900b-1ab62803d58e
சுரேஷ் சந்திராவின் வயிற்றின் இடதுப் பக்கத்தில் அறுவை சிகிச்சை தழும்பு தெரிகிறது. படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -
Google News Preferred Icon

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சிறுநீரகத்தில் இருந்த கற்களை உடைக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, நோயாளியின் இடது சிறுநீரகமே காணாமல்போனதை அறிந்து அவர் அதிர்ச்சிக்கு ஆளாகினார்.

சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்ற அந்த 53 வயது ஆடவர், அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. அதையடுத்து வேறோரு மருத்துவரை அவர் நாடினார்.

சுரேஷுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் (ஸ்கேன்), அவரது இடது சிறுநீரகம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"கடும் வயிற்றுவலியால் ஏப்ரல் 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகக் கூறி அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி வீடு திரும்பினேன்.

"அக்டோபர் 29ஆம் தேதி திடீரென தீவிரமான வலி ஏற்பட்டது. மற்றொரு மருத்துவரை அணுகினேன். அங்கு எனது வயிற்றின் இடதுப் பக்கத்தில் அறுவை சிகிச்சை தழும்பு இருந்ததைப் பார்த்து மருத்துவர் விசாரித்தார். சிறுநீரக கல்லை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக நான் கூறினேன்.

"ஆனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் ஸ்கேன் செய்ய சொன்னார். ஸ்கேன் செய்து பார்த்ததில், எனது இடது சிறுநீரகம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த தனியார் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு கேட்டால், அதுபற்றி யாருமே பதிலளிக்கவில்லை. உடனடியாக சுகாதாரத் துறையிடம் முறையிட்டேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது," என்று சுரேஷ் விவரித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பும் வரை தம்மை உறவினர்கள் பார்க்க மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்றும் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே தாம் இருந்ததாகவும் இவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்