'மாட்டோடு சேர்ந்து மாடாய் உழைக்கிறேன்'
இந்தியாவில் காளை மாடுபோல் பாவம் செய்த பிறவி இருக்க முடியாது. ஒவ்வோர் உயிரினமும் அதனதன் இனத்தை உற்பத்தி செய்துவிட்டு போய்ச் சேரவேண்டும் என்பது உலக இயல்பு.
ஆனால் காளை மாட்டை இனப்பெருக்கம் செய்ய முடியாமல் தடுத்து அதைப் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துவது இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டது என்றாலும் அந்த வழக்கம் அறவே ஒழிந்துவிடவில்லை.
அதனால்தான், முற்பிறவியில் என்ன பாவம் செய்ததோ இப்பிறவி யில் மாடாய்ப் பிறந்து இந்தப் பாடு படுகிறது என்று காளை மாட்டைப் பார்த்து பரிதாபப்படுவது உண்டு.
அதேபோல், வாயில்லா ஜீவனை வைத்து அதன் உழைப்பில் பிழைக் கும் இவர்களுக்கு அடுத்த பிறவி யில் என்ன கதியோ என்று மாட்டு வண்டிக்காரர்களைப் பார்த்து கரித்துக்கொட்டுவதும் உண்டு.
ஆனால் என் வண்டி மாடுகளும் சரி, நானும் சரி நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்கிறார் கலியபெருமாள், 75, என்ற ஒற்றை மாட்டு வண்டிக்காரர். இவரது வாழ்க்கை 10 வயது முதல் வண்டி, மாட்டோடுதான்.
வெங்கையா நாயுடு-குஞ்சம்மாள் தம்பதிக்குப் பிறந்த நான்கு பிள்ளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறு வயதிலேயே இறந்துவிட்டன.
அடுத்ததாக கலியபெருமாள் பிறந்து வளர்ந்து மூன்று வயதானபோது தந்தை வெங்கையா நாயுடு வும் மாண்டுவிட்டார்.
"எங்களுக்குத் தெரிந்த தொழில் கூலிக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பதுதான். என் வாழ்வில் இதுநாள்வரை பள்ளிக்கூடம் பக்கம் ஒரு நாள்கூட நான் எட்டிப் பார்த்ததில்லை.
"பத்து வயதிலேயே வேலைக்குப் போக வேண்டிய நிலை. சிறுவனாக இருந்தபோதே நான் வேறு சிலரிடம் வேலைக்குப் போனேன்.
"காலணா, அரையணா கூலி. (காலணா எனில் அப்போதைய 3 காசு). பிறகு சிறுகச் சிறுக பணம் சேர்த்து கொஞ்சம் கடனும் வாங்கி ஒரு மாட்டையும் கூண்டு வண்டியையும் வாங்கினேன். ஏறக்குறைய 20 வயது முதல் சொந்தமாக வண்டி ஓட்டுகிறேன்.
"1950, 1960களில் ஆட்டோ ரிக்ஷா போன்ற வாகனங்கள் அவ்வளவாகக் கிடையாது. ஆகையால் மக்கள் போக்குவரத்திற்கு மாட்டு வண்டி, குதிரை வண்டிதான் கதி.
"பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்று, இரண்டு கி.மீ. போக எட்டு அணா, பிறகு 2 ரூபாய் என்று கூலி கிடைத்தது. மருத்துவமனை வசதிகளும் அதிகம் கிடையாது.
"கர்ப்பிணிகள், நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வண்டிதான் வழி. கர்ப்பிணிகளை ஏற்றிச் சென்றபோது வழியில் என் ஒற்றை மாட்டு கூண்டு வண்டியிலேயே ஏறக்குறைய 35 சுகப் பிரசவங்கள் நடந்து உள்ளன.
"சில நேரங்களில் கூலிகூட வாங்கமாட்டேன். இரவு, பகல் பார்க்கமாட்டேன். வண்டியில் பிறந்த பிள்ளைகள் இப்போது பல இடங்களிலும் வசதியாக வாழ்கிறார்கள். வழியில் என்னைப் பார்த்தால் வாழ்த்தாமல் போகமாட்டார்கள்.
"அந்தக் காலத்தில் கூலிக்குச் சேவை வழங்கும் குதிரை வண்டி, மாட்டு வண்டியை அதிகாரிகள் திடீரென்று பரிசோதிப்பார்கள்.
"மாட்டை தார்க்குச்சியால் குத்தக்கூடாது. லாடம் தேய்ந்து இருக்கக் கூடாது. சாட்டையை மட்டும்தான் பயன்படுத்தலாம்.
"வண்டியையும் சோதிப்பார்கள். சக்கரங்களுக்கு எண்ணெய் போட்டு வைத்திருக்க வேண்டும்.
"அப்போது ஆண்டுதோறும் உரிமம் வாங்க வேண்டும். ரூ.2 கட்டணம். பெரிய வில்லை ஒன்றில் வண்டிக்காரர் பெயர் பொறித்து இருக்கும். அதை எப்போதும் கையில் கட்டி இருக்க வேண்டும்.
"இப்படியாகச் சம்பாதித்தேன். 1960களின் பிற்பகுதியில் திருமணம். என் மனைவி குமாரிக்கு இப்போது வயது 65 ஆகிவிட்டது. எங்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். எல்லாரும் மணமாகி நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
"எங்கள் சொந்த இடத்தில் என் பிள்ளைகள் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். அதில்தான் மனைவியும் நானும் வசிக்கிறோம்.
"1970களின் பிற்பகுதியில் நிலைமை மாறியது. ஆட்டோ ரிக்ஷா வந்தது. மாட்டு வண்டித் தொழில் படுத்தது. காலத்திற்கு ஏற்ற நிலையிலும் அது இல்லை.
"எனவே கூண்டு வண்டியை விற்றுவிட்டு பாரவண்டி வாங்கினேன். திருமணத்திற்கு வாழை மரங்கள் ஏற்றிச் சென்று கட்டுவது, சாமான்களைக் கொண்டுசெல்வது போன்ற தொழில் மூலம் இன்னமும் சம்பாதிக்கிறேன்.
"ஒரு சோடி வாழை மரங்களை வண்டியில் ஏற்றிச்சென்று திருமண இடத்தில் கட்டுவதற்கு இப்போது வாழை மரங்களுடன் சேர்த்து ரூ.1,200 கிடைக்கும்.
"ஆனால் காலம் முன்புபோல் இல்லை. தொழிலும் படுத்துவிட்டது. என் உடலிலும் தெம்பு போய்விட்டது. என் வாழ்க்கைத் தொழி லில் 50, 60 மாடுகளை வாங்கி, விற்று இருக்கிறேன்.
"மாடு 10, 12 வயது வரை சளைக்காமல் வேலை செய்யும். வைக்கோல், தீவனம், புண்ணாக்கு உட்பட போதிய தீனியை வைக்க வேண்டும், பராமரிக்கவேண்டும்.
"என்னிடம் இப்போது உள்ள மைசூர் மாட்டுக்கு வயது மூன்றரை. ரூ.20,000 கொடுத்து மூன்றுஆண்டுகளுக்குமுன் வாங்கினேன்.
"1960களில் மாடு விலை ரூ.50, ரூ.100தான். இப்போதும் என் மாடு பாடுபட தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாடுதான் சண்டித்தனம் பண்ணுகிறது," என்று தன்னை ஒரு மாடாகக் குறிப்பிட்டு திரு கலியபெருமாள் கூறினார்.
"மாட்டையும் வண்டியையும் விற்றுவிட்டு கடைசிக் காலத்தை அமைதியாகக் கழிக்கும்படி மனைவியும் பிள்ளைகளும் வலியுறுத்தாத நாளில்லை. ஆனால், வண்டியும் மாடும் என்னைவிட்டுப் போனால் நான் படுத்துவிடுவேன்.
பத்து வயது முதல் வண்டி மாட்டைவிட்டு நான் பிரிந்ததே கிடையாது. ஆகையால், என் கடைசிக் காலம் வரை வண்டியையும் மாட்டையும் கைவிடவேமாட்டேன்," என்கிறார் இவர்.
அப்போதைய மண், கப்பி சாலை யாகட்டும் இப்போதைய தார், சிமெண்ட் சாலையாகட்டும் என் தொழிலில் நான் விபத்து என்று எதையும் சந்தித்ததே இல்லை.
"காற்று மாசின்றி, இடையூறின்றி வாழ்க்கைச் சக்கரத்தில் நானும் எனது மாடும் சுழன்றுகொண்டே இருக்கிறோம். நானும் என் மாடுகளும் செய்து உள்ள உதவிகளால் அப்போதும் இப்போதும் எங்களைப் பலரும் வாழ்த்துகிறார்கள்.
"அந்த வாழ்த்துகளால் நானும் சரி, எனது மாடும் சரி, நாங்கள் பாவமூட்டை சுமக்காத புண்ணியவான்கள் என்பதில் ஐயமில்லை," என்கிறார் திரு கலியபெருமாள்.
