தெலுங்கானாவில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை

தெலுங்கானாவில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை

2 mins read
1afde908-9183-4f79-bf41-7c5765c6324a
ரூ.1,000 கோடி முதலீட்டில் அமையும் இந்தியாவின் ஆகப்பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை. - படம்: இணையம்

ஹைதராபாத்: இந்தியாவின் ஆகப் பெரிய தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகருக்கு அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் கொண்டக்கல் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

‘மேத்தா செர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தெலுங்கானா நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தத் தொழிற்சாலையை, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தொடங்கிவைத்தார்.

அந்த நிறுவனம் நவீன மின்சார, மின்னணு ரயில்வே பொருள்களை வடிவமைத்து உருவாக்குகிறது.

‘‘தெலுங்கானாவிலேயே பிறந்து தெலுங்கானாவிலேயே வளர்ந்த ஓர் உள்ளூர் நிறுவனம் அந்த மாநிலத்திலேயே சொந்தமாக தொழிற்சாலையை அமைத்து ரயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது.

‘‘இதை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது,’’ என்று முதல்வர் அந்த நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார்.

ஆந்திரப்பிரதேசம் 2014ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக அமைந்த தெலுங்கானா மாநிலத்தில் ஆறே மாதங்களில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அப்போது உறுதி தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தெலுங்கானா மாநில அரசாங்கம் பல முறை கோரிக்கை விடுத்தும் அப்படி எந்தவொரு ரயில் பெட்டி தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், மேத்தா குழுமம் தெலுங்கானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் 2017ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.

அந்த உடன்பாட்டையொட்டி இப்போது தனியார் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருக்கிறது.

அந்த ஆலைக்கான அடிக்கல்லை தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் 2020 ஆகஸ்ட் 13ஆம் தேதி நாட்டினார்.

ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைகின்ற அந்த ஆலையில், ஆண்டு ஒன்றுக்கு 500 ரயில் பெட்டிகளையும் 50 ரயில் இயந்திரங்களும் தயாரிக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. புதிய ஆலை 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கிறது.

அங்கு அனைத்து விதமான ரயில்வே பொருள்களையும் உருவாக்க வசதிகள் இருக்கின்றன.

ஆலையில் ஏற்கெனவே 558 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். 500 பேருக்கு இதர வழிகளில் வேலை கிடைக்கிறது. விரைவில் மேலும் 1,000 பேர் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று மேத்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கசியாப் ரெட்டி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்