புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் காஸியாபாத் போன்ற பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் பல பகுதிகளில் சாலையோர மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அங்கு சாலைப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியை போக்குவரத்துக் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
போக்குவரத்துக்குத் தயாரான நிலையில் உள்ள சாலை விவரங்கள் குறித்து காவல்துறை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபி பாக் மற்றும் அத்சினி போன்ற இடங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. டெல்லியில் மொத்தம் 14 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று டெல்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்துசெல்லும் நிலை ஏற்பட்டது. டெல்லி தேசிய நெடுஞ்சாலையும் நீரில் மூழ்கியுள்ளது.
டெல்லியில் மழையால் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளாக கன்ஜாவாலாவில் உள்ள சோம் பஸார், நந்த் நக்ரியில் உள்ள செவேதம் சாலை ஆகியவற்றை டெல்லி பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி ரயில் நிலையத்தில், ரயிலில் ஏறுவதற்காக சென்ற இளம் பெண் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அங்கு தேங்கிக்கிடந்த தண்ணீரில் கால் வைக்காமல், அருகேயிருந்த மின்கம்பத்தைப் பிடித்தபோது மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, குஜராத், பஞ்சாப். மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

