செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7d546e84-bc29-48b3-8452-9ccb5f5e38b3
தெலுங்கானாவைச் சேர்ந்த கணினி மென்பொருள் வல்லுநர் ஸ்ரீகாந்த்   - படம்: இந்திய ஊடகம்

மத்திய அமைச்சரவை கூடுகிறது

புதுடெல்லி: இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. தேர்தல்கள் நெருங்குவதால் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 3ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கைப்பேசியை மீட்க முயன்று பலி

ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற கணினி மென்பொருள் வல்லுநர் வழிப்பறியாளர்களிடம் இருந்து தன் கைப்பேசியை மீட்க முயன்றபோது ரயிலில் இருந்து கீழே விழுந்து மாண்டுவிட்டார்.

அந்த ஊழியர் செகந்திராபாத்தில் இருந்து வாரங்கல் நகருக்கு புதன்கிழமை விரைவு ரயிலில் சென்றுகொண்டு இருந்தார்.

வழியில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வட்டாரங்கள் கூறின. ஹைதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் வேலை பார்த்துவந்தார்.

அமர்நாத் செல்ல 300,000 பேர் பதிவு

ஸ்ரீநகர்: இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் இயற்கையாக தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஷ்மீரின் பஹல்காம், பால்டால் ஆகிய இரு வழித்தடங்கள் மூலம் புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இதன்படி அமர்நாத் புனித யாத்திரைக்கு 300,000 க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சின்கா அருகே ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலை சென்றடைய முடியாமல் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரூ.1000 கோடி சட்டவிரோத சொத்து அம்பலம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதைத் தடுக்கும் நோக்கில் செயல்படும் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து சுமார் 62 இடங்களில் சோதனை நடத்தியது.

பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் பணம், 700 கிராம் தங்கம், சொகுசு வாகனங்கள், 65 கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அத்துடன் சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. பெங்களூரு தொட்டபள்ளாப்புராவில் மட்டும் இவர் சுமார் 100 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் நிலம் வாங்கி வைத்திருப்பது ஆவணங்களில் அம்பலமானது.

தாசில்தார் அஜித் ராய் சட்டவிரோதமாக சேர்த்த சொத்து கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பை கூட நெருங்கும் எனக் கூறப்படுகிறது. விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்