பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 36 மணிநேரத்தில் மின்னல் தாக்கி குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டனர்.
கடும் மழையால் பீகார் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பொழியலாம் என்று பாட்னா நகர வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.
பீகாரில் அண்மைய ஆண்டுகளில் பலர் மின்னல் தாக்கி உயிரிழந்துவிட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இம்மாநிலத்தில் 900க்கும் அதிகமானோர் மின்னல் தாக்கி மாண்டனர்.
2020ஆம் ஆண்டில் 459 பேர் மரணமடைந்தனர். 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 280ஆகப் பதிவானது. பொதுவாக ஜூலை மாதத்தில் ஆக அதிகமானோர் மின்னலால் தாக்கப்பட்டு உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் அமைந்துள்ள பகுதி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் இந்நிலை உருவாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

