லக்னோ: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசுக் கப்பல், சுற்றுலாப் படகு இல்லம் போன்ற சேவைகளை உத்தர பிரதேச அரசு தொடங்கவுள்ளது.
உத்தரப் பிரதேச சுற்றுலாத்துறைத் துணை இயக்குநர் ஆர்.பி யாதவ் இதனைத் தெரிவித்தார்.
அச்சேவைக்காக 25 மீட்டர் நீளம் 8.3 மீட்டர் அகலத்தில் சொகுசுக் கப்பல் ரூ.11 கோடியில் வாங்கப்படும். அதில் 100 பேர் பயணம் செய்யலாம். கப்பலின் முதல் தளத்தில் திறந்தவெளிப் பகுதி இருக்கும். பயணிகள் கப்பலின் முதல் தளத்திலிருந்து சரயு ஆற்றின் படித்துறைகளில் மாலையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சிகளைப் பார்வையிட முடியும். இதேபோல் படகு இல்லச் சேவைகளும் தொடங்கப்படும். இவற்றுக்கான படகுத்துறை அமைக்க நயா படித்துறையில் சவுத்தரி சரன் சிங் பூங்கா அருகேயுள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடம் வழங்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நேரத்தில் சொகுசுக் கப்பல், படகு இல்ல சேவைகளைத் தொடங்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்த அவற்றை இயக்கும் நிறுவனங்களிடம் உ.பி. அரசு கேட்டுக்கொண்டுள்ளது.