லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் கனமழையாலும் மின்னல் தாக்கியும் குறைந்தது 34 பேர் மாண்டுவிட்டனர்.
அவர்களில் 17 பேர் மின்னல் தாக்கியும் 12 பேர் நீரில் மூழ்கியும் ஐவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்ததாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாண்டோரின் குடும்பத்தார்க்குத் தலா 500,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்தப் பருவமழைக் காலத்தில் உத்தரப் பிரதேசம் இப்போதே 11 விழுக்காடு கூடுதல் மழைப்பொழிவைப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; தாழ்வான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 68 மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கனமழை காரணமாக அம்மாநிலம் வழியாக ஓடும் கங்கை, ராமகங்கை, யமுனை, ரப்தி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

