50 ஆண்டுகளில் இல்லாத மழை; தத்தளிக்கும் இமாச்சலப் பிரதேசம்

50 ஆண்டுகளில் இல்லாத மழை; தத்தளிக்கும் இமாச்சலப் பிரதேசம்

2 mins read
பெருமழை பெய்யலாம்: இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை
38caf50b-ff39-4bf9-a88a-3911aff56102
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து கால்நடைகளை மீட்டு, பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லும் ஆடவர்கள். - படம்: ஏஎஃப்பி

சிம்லா: வடஇந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழையால் இதுவரை அங்கு 30 பேர் இறந்துவிட்டதாகவும் ரூ.3,000 கோடிக்குமேல் சேதமேற்பட்டுள்ளதாகவும் என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

தலைநகர் சிம்லாவில் மட்டும் 11 பேர் மாண்டுவிட்டனர்.

சந்தர்தால், பாகல் நல்லா உள்ளிட்ட பகுதிகள் மழையால் துண்டிக்கப்பட்டுள்ளதால் 500க்கு மேற்பட்ட சுற்றுப்பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

உனா மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடிசைப் பகுதிகளிலிருந்து 515 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க கடுமையாக முயன்று வருகிறோம். இங்குள்ள சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மீட்பு, உதவிப் பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்,” என்று மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அம்மாநிலத்தில் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

“மாநிலத்தில், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 1,300க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாள்களுக்கு உச்ச விழிப்புநிலையுடன் இருப்போம்,” என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி கூறியுள்ளார்.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் பல இடங்களில் பெருமழை பெய்யக்கூடும் எனக் கூறி, இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்றும் உடைமைகளுக்குச் சேதம் விளையலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கனமழை ஏற்படுத்தியுள்ள பெருஞ்சேதம் குறித்த காணொளிகள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குலுவில் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படுவதையும் மணாலியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுவதையும் அக்காணொளிகள் காட்டின.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமையன்று முதல்வர் சுக்விந்தரைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். அப்போது இமாச்சலப் பிரதேசத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்