புதுடெல்லி: இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் சனிக்கிழமையிலிருந்து மூன்று நாள்களாக இடைவிடாமல் மழை கொட்டுகிறது. ஜம்மு- காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது.
இதனால் ஆறுகள், நீரோடைகள், கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டோடி, உள்கட்டமைப்பு வசதிகளைச் சேதப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் அத்தியாவசியச் சேவைகள் தடைபட்டுள்ளன.
உத்தராகண்டில் பல்வேறு பகுதிகளிலும் அதையொட்டியுள்ள உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கனத்த மழை பெய்ததால் ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடிய அபாயம் குறித்து கவலை எழுந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறியது.
டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியில் நீர்மட்டம் 207.25 மீட்டராக அதிகரித்துள்ளது. அது, 1978ஆம் ஆண்டில் பதிவான ஆக உயரமான 207.49 நீர்மட்டத்தை எட்டக்கூடிய நிலையில் இருப்பதாக அரசாங்க அமைப்புகள் புதன்கிழமை தெரிவித்தன.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.
இதற்கிடையே, இமாச்சலப் பிரதேச மாநிலம், மணாலி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை ஆளில்லா வானூர்தி மூலம் எடுக்கப்பட்ட படங்களில் நெடுஞ்சாலை ஒன்று துண்டிக்கப்பட்டிருப்பதையும் வீடுகள் சேதமடைந்திருப்பதையும் காண முடிகிறது.
வெள்ளத்தில் சில பாலங்களும் கார்களும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளத்தில் பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
சண்டிகர்-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் இருப்பினும் நிலச்சரிவால் அதன் ஒரு தடம் மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
பயணிகளுடன் அந்த நெடுஞ்சாலையில் சிக்கியிருந்த 2,500க்கு மேற்பட்ட வாகனங்கள் நகரத் தொடங்கியிருப்பதாகக் கூறப்பட்டது.