புதுடெல்லி: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற மலேசியச் சுற்றுப்பயணிகள் 12 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர்களின் குடும்பத்தினர் புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், அவர்களைப் பற்றிய தகவலுக்காக இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மலேசியத் தூதரகத் துணை ஆணையர் அமிஸல் ஃபத்ஸ்லி ரஜாலி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிற்கின்றன.
பல பகுதிகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுப்பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் ரஷ்யர்கள் 15 பேரும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.

