புதுடெல்லி: இந்தியாவும் பங்ளாதேஷும் இனி வர்த்தகம் தொடர்பான பணப்பரிமாற்றத்துக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த உள்ளன. இந்த நடைமுறை ஜூலை 12ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தகத்தையும் இரு நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் தனது வர்த்தக ரீதியிலான நகர்வுகளுக்கு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவது குறையும் என்றும் பங்ளாதேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு சிறந்த பயணத்துக்கான முதல் நடவடிக்கை,” என பங்ளாதேஷ் வங்கி ஆளுநர் அப்துல் ரௌஃப் துலுகிதீர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ரூபாயில் இனி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம், இந்தியாவுடனான வர்த்தகச் செலவுகள் குறையும் என்றார் அவர்.
முறையான ஏற்பாட்டின் கீழ் வர்த்தகம் நடைபெறும் என்றும் தொடக்கத்தில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பங்ளாதேஷில் இயங்கி வரும் வங்கிகள் இந்தியாவில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகம் சார்ந்த பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.
நாணய மாற்று மதிப்பானது அவ்வப்போது காணப்படும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே இந்தியாவுடன் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி வர்த்தகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உடன்பாடு கண்டுள்ளன.


