தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெஜ்ரிவால் வீடுவரை வெள்ளம்; மாண்டோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு

2 mins read
250aa048-bbb5-405a-9865-0b20b3deb486
கனமழையால் புதுடெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அதில் சிக்கித் தவித்த பிள்ளைகளை மீட்கும் ஆடவர்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வட இந்தியாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வசிக்கும் பகுதியையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்தது. யமுனை நதியின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் 208.48 மீட்டரைத் தாண்டியது. 45ஆண்டு காணாத அளவு ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததாக முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டார் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி வட்டாரத்துடன் இணைக்கும் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்த இடம் முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லம் மற்றும் டெல்லி சட்டசபையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது.  பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும், சில சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தாழ்வான பகுதிகள், காலனிகள், சந்தைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அதிகாரிகள் 16,564 பேரை வெளியேற்றினர். இவர்களில் 14,534 பேர் டெல்லி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கூடாரங்களிலும், மேம்பாலங்களின் கீழும் தஞ்சம் புகுந்தனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஏறக்குறைய 2,500 நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்தனர்.

இமயமலைப் பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் வெளிநாட்டுப் பயணிகள் உட்படப் பலரும் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

பருவமழைக் காலத்தில் இந்தியாவில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் சேதம் ஏற்படுவது வழக்கமே என்றாலும் பருவநிலை மாற்றத்தால் அவை அடிக்கடி ஏற்படுவதுடன் அவற்றின் தீவிரம் அதிகரித்திருப்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

டெல்லிக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இம்முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு, வழக்கத்தைவிடக் கூடுதலாக பஞ்சாப்பில் 100 விழுக்காடும் இமாச்சலப் பிரதேசத்தில் 70 விழுக்காடும் மழை பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

ஆக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பாலங்களும் கட்டடங்களும் இடிந்து விழுந்ததுடன் பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இமயமலைப் பகுதியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் 40 பேரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களில் 14 பேர் ரஷ்யர்கள்; 12 பேர் மலேசியர்கள். நூற்றுக்கணக்கான இந்தியப் பயணிகளும் அவ்வாறே சிக்கியுள்ளனர்.

டெல்லியில் இம்முறை சராசரிக்குமேல் 112 விழுக்காடு மழை பதிவானதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்