தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து இந்தியா பரிசீலனை

1 mins read
c81f5e4e-895d-4d7a-bff5-c997a39c0cc1
அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால் உள்நாட்டில் அரிசி விலை குறையக்கூடும் என்றாலும் உலகச் சந்தையில் அரிசி விலை மிகவும் உயரக்கூடும். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகின் ஆக அதிக அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, அதன் பெரும்பாலான அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

பாஸ்மதி அல்லாத அனைத்து ரக அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிப்பது குறித்து இந்திய அரசாங்கம் ஆலோசிப்பதாகக் கூறப்பட்டது.

2024ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குமுன் பணவீக்கம் மேலும் அதிகரிக்காமல் தடுக்க அதிகாரிகள் திட்டமிடுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

தடை நடப்புக்கு வந்தால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 80 விழுக்காட்டு அரிசி பாதிப்புக்குள்ளாகும் எனக் கருதப்படுகிறது.

தடையால் உள்நாட்டில் அரிசி விலை குறையக்கூடும் என்றாலும் உலகச் சந்தையில் அரிசி விலை மிகவும் உயரக்கூடும்.

உலக மக்களில் 50 விழுக்காட்டினர் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உலகில் விநியோகிக்கப்படும் அரிசியில் ஏறக்குறைய 90 விழுக்காட்டை ஆசியர்கள் உட்கொள்கின்றனர்.

எல் நினோ வானிலை நிகழ்வால் பயிர்கள் சேதமடையக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில் அரிசி விலை ஏற்கெனவே இரண்டு ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், உலக அரிசி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை வகிக்கும் இந்தியா சில வகை அரிசி வர்த்தகத்தைக் கடுமையாக்கத் திட்டமிடுகிறது.

முன்னதாக, 2022ல் நொய்யரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்த இந்தியா, வெள்ளை, பழுப்பு அரிசி ஏற்றுமதிக்கு 20 விழுக்காடு வரி விதித்தது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் கோதுமை, சோளம் போன்றவற்றின் விலை உயர்ந்த வேளையில் கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கும் அது கட்டுப்பாடு விதித்தது.

குறிப்புச் சொற்கள்