டெல்லி வெள்ளம்: உதவிக்கு விரையும் ராணுவம்

டெல்லி வெள்ளம்: உதவிக்கு விரையும் ராணுவம்

2 mins read
f8d13b8c-32f5-494e-ab8f-bdc376def140
டெல்லி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனமோட்டிகள் பேரின்னலுக்கு ஆளாகியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடிகால் நீரோட்டத்தைச் சீராக்கும் கருவி உடைந்து போனதே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் டுவிட்டர் பதிவு வழியாக இதனை உறுதிசெய்தார்.

இதனையடுத்து, பிரச்சினையைச் சரிசெய்ய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அப்பகுதியிலிருந்து வெள்ளம் நகருக்குள் புகுவதைத் தடுக்க, அவ்விடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி ஒரு சிறு அணை கட்ட முயல்வதாக டெல்லி வெள்ளக் கட்டுப்பாட்டு, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார்.

நீரோட்டம் மட்டுப்பட்டதும் உடைந்த சீராக்கிக்குப் பதிலாக புதிய சீராக்கி பொருத்தப்படும் என்றும் அதற்குக் குறைந்தது நான்கு, ஐந்து மணி நேரம் ஆகலாம் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

டெல்லியிலும் இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பகுதி மாநிலங்களிலும் வழக்கத்திற்கு மாறாக பெருமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் யமுனை ஆற்றில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் கரைகடந்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

உயிரிழப்பு 150ஆக உயர்வு

இதனிடையே, வடஇந்திய மாநிலங்களில் சென்ற ஆறு நாள்களில் மழை, வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 உயிரிழப்புகள் பதிவாயின.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலவரம் மோசமாகி உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் இரு மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணிகள், உள்ளூர்வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் மீட்டனர். உத்தராகண்டில் முக்கியப் பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, கிட்டத்தட்ட 25 சிற்றூர்கள் துண்டிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்